கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
ராகத்துவேஷப் பிரகரணம்
பிறைசை அருணாசல சுவாமிகள் உரையுடன்.
குரு ஸ்துதி
ப்ரஹ்மாநந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
விஸ்வாதீதம்# ககநஸத்ருஸம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம்
ஏகம்நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷீ பூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும்தம் நமாமி.(1)
(இதனது பொருள்) ப்ரஹ்மாநந்த ஸ்வரூபமாகியும், சிரேஷ்டமான சுகத்தைக் கொடுப்பதாகியும், நிர்விகாரமாகியும், ஞானவடிவமாகியும், பிரபஞ்சாதீதமாகியும், ஆகாசத்துக்குச் சமானமாகியும், மஹாவாக்கியங்களுக்கு இலட்சியார்த்தமாகியும், ஒன்றாகியும், நித்தியமாகியும், நின்மலமாகியும், அசைவற்றதாகியும், எப்போதும் சாக்ஷிமாத்திரமாகியும், பாவனைகளுக்கு அப்பாற்பட்டதாகியும், முக்குணங்களும் இல்லாததாகியும் இருக்கின்ற சற்குருவை நமஸ்காரம் பண்ணுகிறேன்.
#பாடபேதம்: துவந்துவாதீதம் - இருமைக்கு அப்பாற்பட்டதாகியும்
(இதுவுமது)
மூகாம்பிகாகடாக்ஷாந் மோஹவிஹீநம் கரோதிஸிஷ்யம்ய:
ஏகாத்மகம்ஸேஷகிரீஸ மஸேஷவேதாந்த தேசிகம்வந்தே (2)
(இதனது பொருள்) மூகாம்பாளது கடாக்ஷத்தினாலே சீடனை மோகத்தினின்றும் விடுவித்தவராகியும், ஏகஸ்வரூபராகியும், சமஸ்தமான உபநிடதங்களுக்கு ஆசிரியராகியும் இருக்கின்ற சேஷகிரீசரென்னும் நாமதேயத்தை உடைய ஆசாரியரை நமஸ்காரம் பண்ணுகிறேன்.
சத்தப் பிரகரணம் - அறிமுகம்
தனது நித்தியானந்த சுயம்பிரகாசத்தினின்று ஓரறிவு சங்கற்பமாகத் தோன்றிப் பகிர்முகமானவிடத்துண்டான அறிவறியாமையே பிரகிருதி மகத்துவமெனவும், அவற்றினின்றும் விகற்பித்தெழாநின்ற அறிவின் அறிவறியாமையே மாயை அவித்தையெனவும், அவற்றிற் பிரதிபலித்த ஜீவேஸ்வர சங்கற்ப விகற்பமே ஞான முதலிய இருபத்தைந்து தத்துவங்களெனவும், அவற்றினின்றும் சங்கற்ப ரூபமாகப் பரிணமித்ததே பஞ்சபூத பௌதிகமெனவும், அவற்றைச் சங்கற்ப விகற்ப ரூபமான சித்தவிருத்தியால் வருகிற ராகத்துவேஷங்களால் அனுபவிக்கும் சுகதுக்கங்களே விடயமெனவுந் தோற்றிய அத்தியாரோபத்தை அபவாதத்தான் முன்னுண்டான முறைமைப்படி அடக்கித் தனது நிசானந்தத்தை வெளிப்படுத்தும் நிமித்தம் அருளே திருமேனியாக எழுந்தருளிய சேஷாத்திரி சிவனார் என்னும் ஞானாசாரியர் சங்கற்ப விகற்பத்தினால் விருப்புண்டாய் அதனால் விடையங்களிற் சுழலாநின்ற சித்தத்தின் விருத்தியைக் கெடுத்து அதற்குச் சுத்தி உண்டாக்கும் பொருட்டு அவ்விருப்பு வெறுப்பை ராகத்துவேஷப் பிரகரணம் எனவும், அச்சித்த சுத்தி உண்டானவிடத்து யதார்த்தத்தைக் காண்பதற்கு ஏதுவாகத் தோற்றின குறியைத் தெரிவித்தற் பொருட்டு அதனைச் சாதன சதுஷ்டயப் பிரகரணம் எனவும், அவை உதித்தவிடத்துப் பஞ்சபூத பௌதிக முதலிய அனைத்தும் சடமெனத் தெரிவித்தற் பொருட்டு அவற்றைத் தூலப் பிரகரணம் எனவும், அவைகள் சடமானவிடத்து அவைகளை மேற்சித்தைக் கொண்டு அசைப்பிக்கும் அந்தகரணங்களைச் சடமென்று அறிந்து அவைகளை நீக்குதற் பொருட்டு அவற்றைச் சூக்குமப் பிரகரணம் எனவும், அவைகள் அடங்கினவிடத்து இவைகட்குக் காரணமான மாயை அவித்தையை (யரோபிதம்) அரோபிதம் என்று அறிந்து அகற்றும் பொருட்டு அவற்றைக் காரணப் பிரகரணம் எனவும், அவைகள் நீங்கினவிடத்து எதிரிட்ட ஜீவேஸ்வரர்களை மறைத்த மகத்துவம்புரசிவிதிகளைச் சிற்பிரகாசமாக நீக்குதற் பொருட்டு அவைகளை மகாகாரணப் பிரகரணம் எனவும், இவைகள் அனைத்தும் தற்பிரகாசமாக நீங்கினவிடத்துத் தனது சுயம்பிரகாசமாக விளங்காநின்ற நித்தியானந்தமோமது ஸ்வரூபமெனத் தெரிவிக்கும் பொருட்டு அதனை நிசானந்தானுபூதிப் பிரகரணம் எனவும் பகுத்துக் கூறிய ஏழு பிரகரணங்களாம். இங்ஙனம் முறையாகக் கூறத் தொடங்கிய இப்பிரகரணங்களுண் முந்தின பிரகரணத்தில் ராகத்துவேஷாதிகளின் ஸ்வரூபத்தை நிரூபிக்கிறார்.
ராகத்துவேஷப் பிரகரணம்
(சுலோகம்)
காமாத்யா: ஷோடஸகுணா ஹேயோபா தேயதாம்கதா:
தேஷாம்ஸ்வரூபம் ப்ரதமம் தாவத்தத்ர நிரூப்யதே (3)
ராகத்துவேஷாதிகளின் சொரூபத்தை நிரூபிக்கின்றார். அவையாவன.
காமமுதற் பதினாறு குணங்களில் ராகமுதற் பதின்மூன்றுந் தள்ளத்தக்கனவும் இச்சை முதன் மூன்றுங் கொள்ளத்தக்கனவுமாம். அவைகளின் ஸ்வரூபம் நிரூபம் நிரூபிக்கப்படுகின்றது. ராகத்தின் அம்சமே காமமாதலால் காமாதியெனக் கூறினார். இப்பதின்மூன்றும் ராகத்துவேஷங்களின் பரியாயமெனக் கொள்க.
எந்த ராகத்துவேஷங்களினால் திரிவித கரணங்களும் திரிவித கன்மங்களைச் செய்கின்றதோ அந்த ராகத்துவேஷங்களின் குணங்களை நிரூபிக்கின்றோம். அவையாவன? ராகம் - துவேஷம் - காமம் - குரோதம் - லோபம் - மோகம் - மதம் - மச்சரம் - ஈரிஷை - அசூயை - டம்பம் - தர்ப்பம் (தற்பம்) - அகங்காரம் - எனப் பதின்மூன்றாம். இப்பதின்மூன்றும் மோட்சம் அடைவதற்கு விக்கினமாய் இருக்கின்றபடியால் இவற்றை முமுட்சுவானவர்கள் காலத்திரயங்களிலும் பரிசியாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
(இவைகளின் விபரம்)
ராகம் (விருப்பு, ஆசை): பரஸ்திரீ கமனம் பண்ண வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு ராகமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் இராவணன் பரதாரமான சீதையம்மனை இச்சித்த ராகத்தினால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னஞ் சகோதரரான சுந்தோபசுந்தா (सुन्द, उपसुन्द) இருவருந் திலோத்தமையைக் கண்டு உன்பாரி என்பாரி என்று அடித்துக் கொண்டு இறந்ததும், இன்னம் அநேகம் பேர் இந்த ராகத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த ராகத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதை பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த ராகம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த ராகத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
துவேஷம் (வெறுப்பு): இப்படியே தனக்கொருவன் அபகாரம் பண்ணினால் அவனுக்குப் பதில் அபகாரம் பண்ண வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குத் துவேஷமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விட்டுவிடவேண்டியது என்றால் பூருவத்தில் இரணியகசிபன் தன் தமையனைக் கொன்ற நாராயணனைக் கொல்லவேண்டுமென்ற துவேஷத்தினால் அவனுடைய பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்திகள் இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்தத் துவேஷத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்தத் துவேஷத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதை பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்தத் துவேஷம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தத் துவேஷத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
காமம்: இப்படியே புத்திர மித்திர களத்திர கிரகக் கிராம க்ஷேத்திர தனதான்யாதிகண் மேன்மேலும் சம்பாதிக்க வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் காமமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் நரகாசுரன் லக்ஷம் ஸ்திரீகளைக் கலியாணஞ் செய்வதற்காசித்துத் தேவ ஸ்த்ரீகள் பதினாயிரம் பேர்களைச் சிறைபிடித்து வந்ததைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான துக்கங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்தக் காமத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த காமத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதைப் பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்தக் காமமிருந்தால் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தக் காமத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
குரோதம்: இப்படியே தனக்கு வேண்டிய காரியங்களில் ஒருவன் விக்கினம் பண்ணினால் அவனிடத்தில் ஆக்கிரகமாக (ஆக்கிரகம்-கடுங்கோபம்) விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் குரோதம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் பகாசுரன் தனது புசிப்பிற்கு விக்கினம் செய்த வீமராஜன் பேரிற் குரோதம் வைத்ததனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னம் அநேகம் பேர் இந்தக் குரோதத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்தக் குரோதத்தினால் துக்கம் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்தில் இந்தக் குரோதம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தக் குரோதத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
லோபம்: இப்படியே தான் சம்பாதித்தப் பதார்த்தங்களில் ஒருத்தருக்கொரு காசளவு செலவு பண்ணலாகாதென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு லோபம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் துரியோதனனானவன் சூதாடிக்கெலித்த (கெலித்தல்-வெல்லுதல்) பாண்டவர்களுடைய ராச்சியத்தில் அவர்கள் வசிக்கக்கூட இடம் கொடுக்கமாட்டோம் என்ற லோபத்தினால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த லோபத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த லோபம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த லோபத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
மோகம்: இப்படியே தான் சம்பாதித்தப் பதார்த்தங்களின் பேரிற் பிரியமோதப் பிரமோதமாய் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் மோகம் என்று பேர். இந்த மோகத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் தசரத மகாராஜன் தனது ஜேஷ்ட புத்திரனான ஸ்ரீராமன் பேரில் வைத்த மோகத்தினால் அவர் மாதுரு வாக்கிய பரிபாலன நிமித்தம் காட்டுக்குப் போனவதனால் இவர் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மோகத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மோகத்தினால் அநேக துக்கங்கள் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மோகம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மோகத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
மதம்: இப்படியே ஐசுவரியர் தமக்குள் மதத்தினாற் கெர்வித்து கிருத்தியாகிருத்தியந் (கிருத்திய-செய்யத் தகுந்த செயல், அகிருத்திய-செய்யத் தகாத செயல்) தெரியாமல் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு மதம் என்று பேர். இந்த மதத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் கார்த்த வீர்யார்ச்சுனனானவன் தன்னிடத்தில் வந்த மகாரிஷியான நாரதரை மதித்து உபசாரம் பண்ணாமல் கெர்வித்திருந்ததைக் கேட்ட பரசுராமனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மதத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மதத்தினால் அநேக துக்கம் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மதம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மதத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
மச்சரம் (பொறாமை): இப்படியே ஒருத்தர் சுகமாயிருந்தால் அவர்களைப் பார்த்துச் சகிக்காமல் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு மச்சரம் என்று பேர். இந்த மச்சரத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் சிசுபாலனானவன் தருமராஜன் ராஜசூய யாகத்தில் அக்கிரதாம்பூலம் (முதற்கொடுக்கும் தாம்பூல மரியாதை) வாங்கத் தக்கவராரென்று விசாரித்து ஸ்ரீகிருஷ்ணசுவாமிக்குக் கொடுத்ததைச் சகிக்காமல் மச்சரப்பட்டதினால் அவனுடைய பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மச்சரத்தினால் அநேகம் பேர் துக்கமே அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மச்சரத்தினால் துக்கமே அனுபவிக்கிறது பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மச்சரம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மச்சரத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
ஈரிஷை: இப்படியே தனக்கு வந்த துக்கம் பிரத்தியாருக்கு வரலாகாதா என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு ஈரிஷை என்று பேர். இந்த ஈரிஷையை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் அருணாக்ஷதனானவன் தனக்கு வந்த துக்கம் தனது இஷ்டனான வாணாசுரனுக்கு வரலாகாதாவென்று எதிர்த்த ஈரிஷையினால் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த ஈரிஷையினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த ஈரிஷையினால் துக்கமே அனுபவிக்கிறது பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த ஈரிஷை இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த ஈரிஷையை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
அசூயை: இப்படியே தனக்கு வந்த சுகம் பராளுக்கு வரலாமாவென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு அசூயை என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் பவுண்டரீக வாசுதேவனானவன் தனக்கும் வாசுதேவன் கிருஷ்ணனுக்கும் வாசுதேவன் என்று பேரா என்கிற அசூயையினால் அவரிடத்து எதிர்த்துப் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்த அசூயையினால் துக்கமே அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த அசூயையினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்தில் இந்த அசூயை இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த அசூயையை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
டம்பம்: இப்படியே தான் பண்ணின தருமத்தை நாலுபேரும் பார்த்து பளா (பளா-அதிசயக் குறிப்பு) நன்றாயிருக்கின்றதென்று சொல்லவேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு டம்பம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் நபூருவ மகாராஜனானவன் துருவாச ரிஷியைப் பார்த்து நான் செய்த யாகங்களைப் போல யார் செய்யப் போகிறார்கள் இது நன்றாயிருக்கிறதே என்று கேட்க யானைத் துதிக்கைப் போல ஆயிரம் வருஷம் நெய் சொரிந்து யாகம் செய்தவனும் இப்படிக் கேட்கவில்லை ஈதென்ன டம்ப யாகமென்று சொன்னவரைக் கோபித்து அவனது யாகத்தோடும் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த டம்பத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த டம்பத்தினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த டம்பம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த டம்பத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
தர்ப்பம் (தற்பம்-கர்வம்): இப்படியே புத்திர மித்திர களத்திர தனதானியாதி சம்பத்துத் தனக்கே உண்டு தனக்கு ஒருத்தரும் சமானமில்லை என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குத் தர்ப்பம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் சதகந்தரனானவன் ஐசுவரியத்தில் தனக்கு ஒருத்தரும் சமானமில்லை என்று அமரர்களுக்கு உபத்திரவம் செய்ததை நாரதர் ராமருக்கு அறிவிக்க அவர் பாரியான சீதையம்மனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த தர்ப்பத்தினால் அநேகம் பேர் துக்கமே அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்தத் தர்ப்பத்தினால் துக்கமே அனுபவிப்பது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த தர்ப்பம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தத் தர்ப்பத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
அகங்காரம்: இப்படியே அடா! என்னை அறியாயா? நான் பிடித்த காரியம் விடுவேனா? நீயா எனக்குப் புத்தி சொல்லுகிறவன்? என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு அகங்காரம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் மது கைடவர் என்பவர்கள் மஹாவிஷ்ணுவோடு பதினாயிரம் வருஷம் யுத்தம் செய்து இளையாமல் அவர் வரங்களுக்கு யாசியாமல் தாங்கள் அந்த விஷ்ணுவுக்கு வரங்கொடுத்த அகங்காரத்தினாற் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த அகங்காரத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த அகங்காரத்தினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த அகங்காரம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த அகங்காரத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
இந்த ராக முதல் அகங்காரம் ஈறான பதின்மூன்று குணங்களினால் இராவணன் முதல் மது கைடவான் ஈறான பேர்கள் மஹா சமர்த்தர்களாய் இருந்தும் அவர்கள் பிராண ஹானி முதலான அநேக அநர்த்தம் கண்முன் அனுபவித்தது சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்படியே சத்திய வர்த்தமான காலத்திலும் இந்த ராகாதி குணங்களால் அநேக ஜனங்கள் பிராண ஹானிகளும் - அநேக ரோகங்களும் - அநேக திரவிய நாசங்களும் - பந்துக்கள் விரோதங்களும் - அபகீர்த்திகளும் இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறோமானபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களும் இந்த ராகாதி குணங்களினின்று விடுபடாமற் போனார்களாகில் இப்படியே அநேக அநர்த்தங்கள் அனுபவிப்பார்கள் என்று தோற்றப்படுகிறபடியினாலும் இந்த ராகாதி பதின்மூன்று குணங்களும் மோக்ஷ மார்க்கத்துக்குச் சத்துருவாய் இருக்கிறபடியினாலும் ஜனனமரணப் பிரவாக ரூபமான நரகத்துக்கு ஏதுவாய் இருக்கிறபடியினாலும் - இப்பதின்மூன்று குணங்களையும் முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.
இவைகளால் உண்டான ஜனன மரணமே நரகமென்பதாம். இதற்கு சமுசயமில்லை. ஜனன மரண ரூபமான தேகமே நரகமென்பதற்கு பிரமாணம். எங்கே சரீரம் உண்டோ அங்கே எல்லாம் துக்கமுண்டு. எங்கே சரீரம் இல்லையோ அங்கே எல்லாம் துக்கமில்லை என்று வேதத்தில் சொல்லியிருக்கிறபடியினால் இந்தச் சரீரமே சகல துக்கங்களுக்கும் சகல அநர்த்தங்களுக்கும் ஏதுவாக இருப்பதினால் இந்தச் சரீரமே நரகமென்று சொன்னது சித்தம். ஆதலால் இந்தச் சரீரத்துக்கு ஏதுவான இப்பதின்மூன்று குணங்களையும் முமுட்சுவாயிருக்கப்பட்ட பேர்கள் அவசியம் விட்டுவிடவேண்டியது சித்தம்.
இனிக் கொள்ளத்தக்கவைகளான இச்சை முதன் மூன்று குணங்களையும் நிரூபிக்கிறோம். அவையாவன?
இச்சை: பசி தாக நிமித்தம் அன்னபானாதி கிராகியமும் (அன்னம்-சோறு, பானம்-நீர், கிராகியம்-கொள்ளத்தக்கது), மலமூத்திர விசர்ச்சனமும் பண்ணவேண்டும் என்று வருகிற சித்தவிருத்திக்கு இச்சை என்று பேர். இவை பண்ணாமற் போனாற் துக்கமும், பண்ணினாற் சுகமுமாய் இருக்கும். இதனாற் பந்த மோக்ஷம் சுவர்க்க நரகமில்லை ஆதலாற் கொள்ளத்தக்கதாம்.
பத்தி (பக்தி): இப்படியே மகாதேவரிடத்தில் பிரியம் வருகிற சித்தவிருத்திக்குப் பத்தி என்று பேர்.
சிரத்தை: குரு வேதாந்த சாத்திரங்களின் மிகவும் விசுவாசம் வைத்த சித்தவிருத்திக்குச் சிரத்தை என்று பேர்.
இந்தப் பத்தி சிரத்தை முத்தியை அடைவிப்பதற்கு ஏதுவாதலினாலும் பூருவத்திற் கட்டுவாங்கதன் என்கிற மகாராஜன் இந்தச் சிரத்தாபத்தியினால் இரண்டு நாழிகையின் முத்தியை அடைந்தான் என்று சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் முமுட்சுவானவர்கள் இந்தச் சிரத்தாபத்தி அவசியம் பண்ணவேண்டியது சித்தம். ராகாதி பதினாறு குணங்களும் நிரூபிக்கப்பட்டன.
ராகத்துவேஷப்பிரகரணம் முற்றுப் பெற்றது.