Sunday, July 31, 2022

நவக்கிரகத் தோத்திரம்

காப்பு
மண்ணு ளுயிர்கட் கனைத்து மாறாதளித்துநல
நண்ணு நவக்கிரக நண்புசொலத் - தண்ணுலவு
திங்களணி தங்குமுகர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையரு ளைங்கரனார் காப்பு

சூரியன்
காசினி யிருளை நீக்குங் கதிரொளியாகி யெங்கும்1
பூசனை யுலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி யேழுடைய தேர்மேன் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா வெனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

சந்திரன்
அலைகட லதனி னின்று மன்றுவந் துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுள ரெவரு2 மேத்துஞ்
சிலைனுத லுமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்3 மேரு
மலை வலமாக வந்த மதியமே போற்றி! போற்றி!

செவ்வாய்
வசனநற் றைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்(கி)ரமங்கள் போர்தனில் வெற்றி யாண்மை
நிசமுட னவரவர்க்கு4 நீணிலந்தனி லளிக்குங்
குசனில மகனாஞ் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

புதன்
மதனனூன் முதலா நான்குமறை புகல் கல்வி ஞானம்
விதமுட னவரவர்க்கு விஞ்சைக ளருள்வோ(ன்) றிங்கள்
சுதன் பசுபாரிபாக்யஞ்5 சுகம்பல கொடுக்க வல்லன்
புதன் கவிப் புலவன் சீர்சால் பொன்னடி6 போற்றி! போற்றி!

குரு
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன்7 மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் னாட்டினுக் கதிபனாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி னீடுபோகத்தை நல்கு
மிறையவன் குருவியாழ மிருமலர்ப்8 பாதம் போற்றி!

சுக்கிரன்
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்9 வையங்
காக்கவான் மழை பெய்விக்குங் கவிமகன் கனகமீவோன்
றீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமையெழுப்பும்
பார்க்கவன் சுக்கிராசாரி பாத பங்கயமே10 போற்றி!

சனீஸ்வரன்
முனிவர்க டேவரே மும்மூர்த்திகள் முதலினோர்கள்11
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைய தல்லாதுண்டோ12
கனிவுள தெய்வ(ம்) நீயே கதிர்சேயே காகமேறுஞ்
சனியனேயுனைத் துதிப்பேன்13 றமியனேற்கருள் செய்வாயே!

ராகு
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயப்
போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினாற் சிரமே யற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டு(ம்)பெற்ற
ராகுவே யுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய்14 ரட்சிப்பாயே!

கேது
பொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டா லாழி
தன்னையே கடைந்து முன்னந் தண்ணமு தளிக்க லுற்ற
பின்னைநின் கரவானுண்ட15 பெட்பினிற் சிரம்பெற் றுய்ந்தா
யென்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே!

பொது
சூரியன் சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழம் வெள்ளி
காரியு மிராகு கேது கடவுள ரொன்பா னாமத்
தாரியல் சக்கரத்தைத் தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திரரு மட்ட16 பாக்கிய(மு) நல்குந் தானே


பாடபேதம்
(1) யோங்கும்
(2) கடவுளென் றெவரு
(3) பிறையாம்
(4) னடியவர்க்கு
(5) 5.1 சுதன் கன பவுசு பாக்யஞ்/ சுதன் பவிசு பாக்கியங்கள்
      5.2 சுதன் பல சுபாசுபங்கள்
      5.3 சுதன் மாநிலத்தோ ரிச்சை
(6) பூங்கழல்
(7) வானவர்க்காசான்
(8) னிருமலர்ப்
(9) குருவாம்
(10) பங்கயங்கள்
(11) 11.1 முனிவர்க டேவரேழும் மூர்த்திகள் முதலினோர்கள்
        11.2 முனிவர் தேவரேழு மூர்த்திகள் முதலினோர்கள்
        11.3 முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
        11.4 முனிவர்கள் தேவர்கள் ஏழு(லக) மூர்த்திகள் முதலானோர்கள்
(12) மகிமைய தல்லாலுண்டோ / மகிமையல்லால் வேறுண்டோ
(13) சனி பகவானே போற்றி
(14) துதிப்பே னிட்கணம்
(15) கரவாலுண்ட
(16) புத்திர ருண்டாம்


பாடல் வேற்றுமைகள்
ராகு பகவான்
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிர மற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

கேது பகவான்
மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து
நீதியால் நடுவகுத்து நிறைதளர் தந்தையைச் சீர்க்கும்
தீதுகள் யாவும் தீர்க்கும் சிவன்கையில் சிரமே பெற்ற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே!

மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து
கோதுகள் யாவும் தீரக் குருவருள் பாதம் போற்றி
மாதுசேய் கதிர் விழுங்கும் சிவன்கையில் சிரமே பெற்ற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியால் ரட்சிப்பாயே!

மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுத மீயும்
போதுநீ நடுவிருக்கப் புகழ்சிர மற்றுப் பின்னர்
ஒதுறும் அரச நாகத்துயர் சிரமைந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப்பாயே!

No comments: