Monday, August 1, 2022

நந்தி இறைவனிடம் கேட்ட பதினாறு பேறுகள்

சிவபெருமான், நந்தி பகவானுக்கு பட்டாபிஷேகம் செய்து கணங்களின் தலைவனாக நியமித்தபோது, சிவனடியார்கள் வேண்டும் பதினாறு பேறுகளை வரமருள வேண்டும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டார் நந்தீஸ்வரர்.

சிவபெருமான் சன்னிதானத்தில் திருநந்திதேவர் விண்ணப்பஞ் செய்த 16 பேறு

கலிநிலைத்துறை 

மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம்புலன்களுக்கேவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும்
உறுதி நல்லறஞ் செய்பவர் தங்களோ டுறவும்

யாதுநல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாதவத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு மகிழ்வும்
ஓது நல்லுப தேச மெய் யுறுதியும் அன்பர்
தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொளுந் தெளிவும்

மனமும் வாக்கும் நின்னன்பர்பால் ஒருப்படு செயலும்
கனவிலும் உனத
ன்பருக் கடிமையாங்* கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்

தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடு திறனும்
வாய்மை யாகவே பிறர்பொருள் விழைவறா வளனும்
ஏமுறும் பரதாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்ம்மை நெஞ்சில் யான் எனதெனும் செருக்குறாத் துறவும்.

கலிவிருத்தம்
துறக்கமீ துறைகினும் நரகில் தோய்க்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும இவ்வரம்
மறுத்திடா தெனக்குநீ வழங்கல் வேண்டுமால்.

*கனவிலும் உனதடியருக் கன்பராங் கருத்தும்

16 பேறுகள்:

1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி.
4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு.
5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு.
6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச்செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10. கனவிலும் சிவனடியார்க்கு அடிமை யாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் கடவுளாக வழிபடாத நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14. பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை.
15. நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்.
16. நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.

No comments: