முதல் தந்திரம் – கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தானுணர்ந் தெட்டே. (1)
ஒன்று அவன்
தானே –
மெய்ப்பொருள் ஒன்றே; இறைவன் ஒருவனே. பரம்பொருள் ஒன்றே; பேரறிவும் பேராற்றலும் பேரருளும் கொண்டது.
இரண்டு அவன்
இன்னருள் –
1) இறைவன் பேரறிவும் பேராற்றலும்
கொண்டவன். பேரறிவுடைய பரம்பொருள் அருள் மழை பொழிவதற்காகப் பேராற்றல் மிக்க இயக்கமாகத் தன்னை மாறிக் கொள்கின்றது. அவன் ஒருவனே என்றாலும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதற்கான சக்தியென்னும் நிலைக்குப் பிரதானம் கொடுத்து இரண்டாக வெளிப்படுகிறான். சிவமும், சக்தியும்
சேர்ந்த பரம்பொருளே நமக்குத் தந்தையும் தாயுமாவர். அவர்களே ஊழித்தலைவர்கள். கால இட
தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். நாதமாயும், விந்துவாயும், ஒலியாயும், ஒளியாயும்
அமர்ந்தவர்கள். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அருளின் தன்மை விளங்குகின்றது.
2) அவனது அருள், அறக்கருணை, மறக்கருணை என இரண்டாய் இருக்கும், அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். (சொன்னதைக் கேட்டு அதன்படி நடப்போர்க்கு நலம் செய்வது அறக்கருணை எனப்படும். சொன்னதைக்கேட்டு அதன்படி நடவாதாரை அவரவர் தன்மைக்கேற்ப இடர் கொடுத்து அவ்விடரால் அவர்களை நன்னெறிப்படுத்தி நலம் செய்வது மறக்கருணை எனப்படும்).
நின்றனன் மூன்றினுள்
–
1) பரம்பொருளின் அருள் இயக்கம்
படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகிய மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றன. இறைவன்
முத்தொழிலைச் செய்கின்றான் என்கிறபோது அது உயிர்களுக்காகச் செய்யப்படுகின்றது என்பதும்,
அப்படியென்றால் உயிர்கள் பாச நீக்கம் பெற்று, வீடுபேறு அடைவதற்காக இந்தத் தொழில் நடக்கின்றது
என்பதும், இதற்காகவே இறைவன் உயிருக்கு உயிராகவும், உயிருக்கு வேறாகவும், உயிரை நடத்திச்
செல்லும் நாயகனாகவும் இயங்குகின்றான் என்பது புலனாகும். ஆக, இறைவன் பதி, பசு, பாசம்
என்கிற மூன்று பொருள்களிலும் நின்றான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும்
காரணமான பதியினுடைய இயல்புகள் சத்து, சித்து, ஆனந்தம் ஆகும்.
2) இலயம், போகம், அதிகாரம்
என்னும் மூன்று நிலைகளில் நின்றனன். இலயம் என்பது அருவ நிலை, போகம் என்பது அருவுருவ
நிலை, அதிகாரம் என்பது உருவ நிலை.
(இலயம் - ஞானமாத்திரமே திருமேனியாகவுடைய
கடவுள்நிலை, போகம் - ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை, அதிகாரம் - ஞானங்குறைந்து
கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை).
(நின்று – எப்பொழுதும், always, permanently, நிற்றல் – standing, staying)
நான்கு உணர்ந்தான்
–
1) அறம், பொருள், இன்பம்,
வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். அறம்
முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான்.
வேத நெறி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு நிலைகளில் வெளிப்படுகின்றது. வேதங்களை
உணர்ந்த இறைவன் இந்த நான்கு நெறிகள் மூலமாகவும் உலக மக்களை உணர்விக்கின்றான்.
2) உலகினை இறந்து (கடந்து)
நிற்றலும், உலகெலாம் தன்னுருவில் தோன்றி ஒடுங்க நிற்றலும், உலகிற்கு உயிராய் நிற்றலும்,
உலகாய் நிற்றலும் ஆகிய நான்கு நிலைகளாக உணரப்படுவர் என்று பொருள். விசுவாதிகன், விசுவகாரணன்,
அந்தர்யாமி, விசுவரூபி என்ற நான்காக உணரப்படுபவர் என்பது கருத்து.
3) விழிப்பு, கனவு, ஆழ் உறக்கம், துரியம் எனும் நான்கு நிலைகளிலே துரிய நிலையை உணர்ந்தவன்.
ஐந்து வென்றனன்
–
1) செவி முதலிய ஐம்பொறிகளின்
வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றனன்.
2) ஐம்பூதங்களாகிய நிலம்,
நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வென்றனன்.
3) ஐந்தொழில்களாகிய தோற்றம்,
காத்தல், ஒடுக்கம், மறைப்பு, அருளல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம்)
ஆகியவற்றை வென்றனன்.
வென்றனன் என்றது, அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்.
ஆறு விரிந்தனன்
–
1) மந்திரம், பதம், வன்னம்,
புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தனன் (அத்துவா - வழி, மந்திரம்
பதம், வன்னம் சொற்பிரபஞ்சம் எனவும், புவனம் தத்துவம் கலை பொருட் பிரபஞ்சம் எனவும் பெயர்
பெறும். இவை வினையை ஈட்டுவதற்கும் வினையை நுகர்வதற்கும் உரிய வழிகளாம்.)
2) தவத்திரு சுத்தானந்த பாரதியார்
அவர்கள் தனது திருமந்திர விளக்க நூலில் இதற்குப் பொருளாக இறைவன் ஆறுவிதமான சமயங்களிலும்
விரிந்து நின்றவன் என்று கூறுகிறார். இந்த ஆறு சமயங்களும், பொதுவாக அகச்சமயம், அகப்புறச்சமயம்,
புறச்சமயம், புறப்புறச்சமயம் என்கிற நான்கு உட்பிரிவுகளில் தங்குகின்றன என்றும், சமயங்கள்
எத்தகைய கொள்கைகளைப் பெற்றிருந்தாலும் அல்லது தெய்வங்களை வணங்கினாலும், ஆழ்ந்து நோக்கினால்,
இறைவன் ஒருவனே என்கின்ற அடிப்படையில் இறைவனே ஆறு சமயங்களாக அவற்றிலுள்ள தத்துவங்களாக
மக்களுடைய மனத்திற்குத் தக்கபடி காட்சியளிக்கின்றான் என்கிற பொருளைத் தருகின்றார்.
3) ஓர் அறிவுமுதல் ஆறறிவு
ஈறாகவுள்ள அனைத்துயிர்க்கும் அறிவிக்க ஆறாய் விரிந்தனன்
4) ஆதியும் அந்தமும் இல்லாத
போதிலும், நாதாந்தம், கலாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்று
ஆறு அந்தங்களாக விரிந்தனன்.
5) உடலில் ஆறு ஆதாரமாய் விளங்கும்
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய சக்திச் சக்கரங்களாக
விரிந்தனன்.
6) The meaning of bhagavān is worth noting here (however this interpretation is not found in saiva siddhānta literature) – bhagavān is the one who has bhaga, the six-fold virtues in absolute measure. These are: all knowledge, jñāna; total dispassion, vairāgya; the capacity to create, sustain and resolve, vīrya; absolute fame, yaśas; all wealth, śri; and overlordship, aiśvarya.
ஏழும்பர்ச்
சென்றனன் –
1) ஏழு உலகங்கள் சென்றனன்
(உலகங்கள் அனைத்திலும் வியாபித்து இருத்தல், பரந்து நிறைந்திருத்தல்).
ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு
ஈறாகக் கூறியது, ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான் என்பது உணர்த்துதற்கு. ஏழும்பர்ச்
சென்றனன் என்றது, அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே என்றற்
பொருட்டு.
2) எழுவகைப் பிறப்பிற்கும் அப்பால்நின்று பிறப்பினை நல்கி இயக்கும் பிறப்பில் பெருமான்.
தான் இருந்தான் –
தானேயாய் இருந்தான், தானேயாய் இருத்தலாவது சத்தியோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் “ஒன்றவன் றானே” என்றதும் இறைவனது, “சொரூபம்” எனப்படும் உண்மை நிலை. ஏனைய, “தடத்தம்” எனப்படும் பொது நிலை.
அவனை, நெஞ்சே,
நீ அறிந்து அடை.
இரத்தினச் சுருக்கமாக மாணிக்கவாசகர் “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்று வாழ்த்தினார். "நித்தியமாய், நிர்மலமாய், நிட்கலமாய், நிராமயமாய், நிறைவாய், நீங்காச் சுத்தமுமாய், தூரமுமாய், சமீபமுமாய், துரிய நிறைச்சுடராய்" விளங்கும் என்று பரம்பொருளின் தன்மையைத் தாயுமானார் பெருமான் கூறுகின்றார்.
பரம்பொருளின் தன்மையைப் பலவாறாகப் பிரித்துச் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பரம்பொருள் என்பது "சத், சித், ஆனந்தம்" என்றே அழைக்கப்படுகிறது. பரம்பொருளைச் சத்தியம், ஞானம், ஆனந்தம் என்று மறைகள் கூறுகின்றன. பரம்பொருள் அறிவுப் பெருவழி. ஆனந்தத்தின் இருப்பிடம். இங்கே பயன்படுத்தப்படும் சொல் ஆனந்தம். இன்பம் என்று கூறுகின்றபொழுது அதற்கு எதிராகத் துன்பம் என்கிற அனுபவம் உடனேயே வருகின்றது. ஆனால், ஆனந்தம் என்கின்ற நிலைக்கு எதிராகவோ மேலாகவோ ஒரு நிலை கிடையாது. ஆனந்தத்திலிருந்து உயிர்கள் தோன்றின. தோன்றிய உயிர்களெல்லாம் ஆனந்தத்தில் வாழ்கின்றன. இறுதியில் ஆனந்தத்தில் இலயமடைகின்றன என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
இறைவன் உடலிலும், உயிரிலும், அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இரண்டறக் கலந்துள்ளான். தண்ணீரில் உப்புக் கரைந்திருக்கும் பொழுது உப்பினைத் தனியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கதிரவனின் வெப்பத்தால் நீர் ஆவியாகும் பொழுது உப்பானது தனியே தங்குகின்றது. அதேபோல இறைவன் தான் படைத்த உயிரினங்களுடன் வேற்றுமையின்றிக் கலந்துள்ளான்.
குறிப்பு: அனன் [அன் (சாரியை)
+ அன் (விகுதி)] என்னும் சாரியை கூடிய ஈறு, படர்க்கை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவானதே.
அனன் என்பது முக்கால வினைமுற்றிலும் வரக் கூடிய சாரியை. எ-டு: செய்தனன் செய்கின்றனன்
செய்வனன்
ஐம்பால் – ஆண்பால், பெண்பால்,
பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
மூவிடம் – தன்மை, முன்னிலை,
படர்க்கை