Sunday, August 15, 2021

16 பேறுகள் - பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

தமிழர்களின் திருமணச்சடங்கில்,

ஆல் போல் தழைத்து
அறுகு போல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. 

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது  பெரியோர்கள் ஆசி கூறும் தருவாயில் வாழ்த்துவதற்கு பயன்படுத்துவர். இங்கே பதினாறும் பெற்று என்பது பதினாறு பேறுகளை குறிப்பது. பதினாறு பேறுகள் என்பது 16 விதமான செல்வங்கள்.

பேறு - பெறப்படுவது. நாமாகப் பாடுபடாமல் ஈஸ்வர அனுக்ரஹத்தால் பெற்றுக்கொள்வது 'பேறு' என்பது. ஈஸ்வரன் அருளில் தன்னியல்பாகக் கிடைப்பவை மட்டுமின்றி நாமாக முயற்சி செய்து, உழைத்துப் பெறக்கூடியதும் இவற்றில் உண்டு.

காளமேகப் புலவர் தனிப்பாடல் 

துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம் 
அதிதானியஞ் செளபாக்கியம் போக - வறிவழகு 
புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது 
பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபானே!

துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் - அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம் குலம் நோவுஅகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!

மதுரைப் பராபரனே - மதுரையிலே கோயில் கொண்டிருக்கின்ற பரம்பொருளே, 
பதினாறு பேறும் தருவாய் - இந்தப் பதினாறு பேறுகளையும் தந்து எனக்கு அருள் செய்வாயாக.

1. துதி - புகழ் 
2. வாணி - கல்வி 
3. வீரம் - மனவுறுதி
4. விசயம் - வெற்றி
5. சந்தானம் - மக்கட்பேறு, குழந்தை 
6. துணிவு - தைரியம்
7. தனம் - செல்வம்
8. அதி தானியம் - அதிகமான தானியவளம்
9. செளபாக்கியம் - சிறந்த இன்பம்
10. போகம் - சுகம் 
11. அறிவு - ஞானம்
12. அழகு - பொலிவு
13. புதிதாம் பெருமை - புதிதாக தினமும் சேர்கின்ற சிறப்பு
14. அறம் - அறஞ்செய்யும் பண்பு
15. குலம் - நல்ல குடிப்பிறப்பு
16. நோவகல் பூண்வயது - நோயில்லாமையோடு கூடிய நீண்ட ஆயுள்


அபிராமி அம்மைப் பதிகம் - 1

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
                கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
                கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
                தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
                தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
                துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
                தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
                ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
                அருள்வாமி! அபிராமியே! 

கலையாத கல்வியும் குறையாத வயதும்
                ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
                கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
                தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
                தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
                ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
                தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
                ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
                அருள்வாமி! அபிராமியே!

1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. ஓர் கபடு வாராத நட்பு - வஞ்சகம் இல்லாத நட்பு 
4. கன்றாத வளமை
5. குன்றாத இளமை
6. கழுபிணியிலாத உடல் - நோய் இல்லாத உடல்  
7. சலியாத மனம் - தளர்ச்சியுறாத உள்ளம் 
8. அன்பு அகலாத மனைவி - அன்பான வாழ்க்கை துணை
9. தவறாத சந்தானம் - மக்கட்பேறு 
10. தாழாத கீர்த்தி - குறையாத புகழ்
11. மாறாத வார்த்தை - வார்த்தை தவறாத நேர்மை
12. தடைகள் வாராத கொடை - தடையில்லாது தொடரும் கொடை
13. தொலையாத நிதி - தொலையாத செல்வம்
14. கோணாத கோல் - நடுநிலையான அரசு
15. ஒரு துன்பமில்லாத வாழ்வு - துன்பம் இல்லாத வாழ்க்கை
16. துய்யநின் பாதத்தில் அன்பு - தூய்மைமிக்க நின் திருவடிகளை என்றும் போற்றி வணங்கிடும் அன்பு நிலை 


அபிராமி அம்மைப் பதிகம் - 2

சகலசெல் வங்களுந் தரும்இமய கிரிராச
                தனயைமா தேவி! நின்னைச்
சத்யமாய் நித்யமுள் ளத்தில்து திக்குமுத்
                தமருக்(கு) இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
                அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
                ஆகு நல்லூழ்நு கர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
                சுகானந்த வாழ்வளிப் பாய்;
சுகிர்தகுண சாலி! பரிபாலி! அனுகூலி! திரி
                சூலி! மங்கள விசாலி!
மகவுநான்! நீதாய்! அளிக்கொணாதோ? மகிமை
                வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
                வாமி! அபிராமி உமையே!


சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
                தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும்
                உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
                அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி
                ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
                சுகானந்த வாழ்
வு ளிப்பாய்;
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! 
                
திரிசூலி! மங்கள விசாலி!
மகவுநான்! நீதாய்! அளிக்கொணாதோ? மகிமை
                
வளர் திருக்கடவூரில் வாழ் 
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி
                
மகிழ்வாமி! அபிராமி உமையே!


1. நோயின்மை 
2. கல்வி 
3. தனம் 
4. தானியம்
5. அழகு 
6. புகழ் 
7. பெருமை 
8. இளமை
9. அறிவு 
10. சந்தானம் 
11. வலி  - உடல் மற்றும் உள்ளத்து வலிமை
12. துணிவு 
13. வாழ்நாள் - நீண்ட ஆயுள் 
14. வெற்றி
15. ஆகு நல்லூழ் 
16. நுகர்ச்சி - மேற்சொன்ன 15 பேறுகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு


அபிதான சிந்தாமணியில் உள்ள 16 பேறுகள் 

புகழ் (fame), கல்வி (learning, education), வலி (strength, power), வெற்றி (victory, success), நன்மக்கள் (good children), பொன் (gold), நெல் (abundance of rice, grain), நல்லூழ் (favourable destiny), நுகர்ச்சி (proper and unsullied enjoyment), அறிவு (wisdom), அழகு (beauty), பெருமை (greatness, magnanimity), இளமை (youthfulness), துணிவு (courage), நோயின்மை (perfect health), வாழ்நாள் (longevity) ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வம்.

இன்னுமொரு பதினாறு பேறுகள் 

இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம், தானியம்,
        இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு,
அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடைமை, அகத்தவம்,
        அழகு, புகழ், மனித மதிப்புணர்ந்தொழுகும் பண்பு,
பொறையுடைமை எனும் பேறு பதினாறும் பெற்று
        போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி
மறைவிளக்கம் உயர் வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து
        மனையறத்தின் ஒளிவிளக்காய் வளம் ஓங்கி வாழ்க.
- தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி


புகழேந்திப்புலவர் செய்த இரத்திநச் சுருக்கம் என்னும் நூலில் உள்ள 16 பேறுகள்

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... வலி யேரிளமை
நன்மக்க ணோயின்மை வாழ்நாட் புவிமின்னல னுகர்ச்சி
பொன் னறி வூக்க மிகுகல்வி வெற்றிபுகழ் பெருமை
நென் முதலீ ரெட்டுப் பேறுநற் புண்ணியர் நேர்வனவே. (47வது பாடல்)

1. வலிமை (வலி)
2. அழகு (ஏர்)
3. இளமை
4. நன்மக்கள்
5. நோயின்மை (நல்ல உடல்நலம்)
6. வாழ்நாள் (நீண்ட ஆயுள்)
7. புவிமின் நலம் 
8. நுகர்ச்சி
9. பொன்
10. அறிவு
11. ஊக்கம்
12. கல்வி
13. வெற்றி
14. புகழ்
15. பெருமை
16. நெல் (தானியம்)